29/07/2026
#சுகாதார கல்வி மற்றும் சுகாதார #மேம்பாடு தொடர்பான மீளாய்வு கூட்டம்
#சுகாதாரக் கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு தொடர்பான வருடாந்த மீளாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார கல்வி பணியகத்தின் அறிவுறுத்தலுக்கமைய, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தை சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
இக்கூட்டத்தில் பிராந்திய பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர்கள் மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி, சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறூஸ் மற்றும் முன்பிள்ளைப் பருவ மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரங்கி ஆகியோர் சுகாதாரக் கல்வி மற்றும் மேம்பாடு குறித்த தமது கருத்துகளையும் விளக்கங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார கல்வி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளால் விளக்காட்சிகளுடன் (Presentations) விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கடந்த கால சுகாதார கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவற்றைச் செயற்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது